சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில், நிவாரணம் வழங்க தன்னார்வலர்களுக்கு அனுமதி தேவையில்லை என்று அறிவித்த நீதிமன்றம், அதுகுறித்து 48  மணி நேரத்திற்கு முன்பே காவல்துறையினருக்கு தகவல், தெரிவிக்க வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடித்து, 4 பேர் மட்டுமே நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு  மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு சில உதவிகளை வழங்கி வந்தாலும், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள்  நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தனர். இந்த நிகழ்வின்போது கட்சியினர் ஏராளமாக திரள்வதால் சமூக விலகல் பாதிக்கப்பட்டு, கொரோனா தொற்று பரவல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறி, தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதை எதிர்த்து, திமுக, மதிமுக உள்பட சில கட்சிகள்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதற்கிடையில், தமிழகஅரசு விளக்கம் அறிவித்தது. அதில்,  நிவாரண உதவிகள், உணவுகளை வழங்கும் போது சமூக இடைவெளியை மறந்து, பலர் செயல்படுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது. அதனால், நிபந்தனைகளுடன் உணவுப் பொருட்களை வழங்கவே தமிழக அரசு அறிவுறுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் , அரசின் விளக்கத்தை அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்தன.  இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு நீதிபதிகள் இன்று தீர்ப்பை வெளியிட்டனர்.

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால், தகவல் தெரிவிக்க வேண்டும்.

நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து 48 மணிநேரத்திற்கு முன்பாகவே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

நிவாரணப் பொருட்கள் வழங்க ஓட்டுநர் உள்பட வெறும் 4 நபர்களே செல்ல வேண்டும்.

நிவாரணப் பொருட்களை வழங்குபவர்கள் முகக்கவசம் , சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.