கோலாலம்பூர்: மலேஷியாவில் முஸ்லீம் அல்லாதவர்களும், சன்னி அல்லாத ஷியா உள்ளிட்ட இதரப் பிரிவினரும் தங்களின் மதக் கொள்கைகளைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு. ஆனால், அவற்றை சன்னி முஸ்லீம்களிடம் பரப்புதல் கூடாது என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் மகாதிர் முகமது.

மலேஷியாவில் வரும் ஜுலை 13ம் தேதி நடைபெறுவதாக இருந்த அம்மான் மெசேஜ் செமினார் என்ற நிகழ்ச்சி, வெடிகுண்டு மிரட்டலால் ரத்துசெய்யப்பட்டது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அம்மான் மெசேஜ் என்பது 200 வேறுபட்ட இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அறிஞர்களை ஒன்றிணைத்த ஒரு பிரகடனம் ஆகும். கடந்த 2004ம் ஆண்டு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

ஷியா எதிர்ப்பு குழுவினர், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, அந்த செமினார் ரத்துசெய்யப்பட்டது. இதனையடுத்துதான் இவ்வாறு தெரிவித்துள்ளார் மலேஷியப் பிரதமர்.

“ஒருவர் பெளத்தராக இருக்கலாம், ஷியாவாக இருக்கலாம். அது அவரவர் உரிமை. ஆனால், தங்களின் நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை மலேசிய சன்னி முஸ்லீம்களிடம் பரப்புதல் கூடாது” என்றார்.