என்ஆர்சி இப்போதைக்கு இல்லை, வரும்போது ஆலோசிப்போம்: அமித் ஷா பேட்டி

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவது பற்றி இப்போது எந்த திட்டமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்து உள்ளார். அந்த பேட்டியில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பத பற்றி விளக்கி பேசினார்.

அவர் தமது பேட்டியில் மேலும் கூறியதாவது: என்.ஆர்.சி இன்னும் வரவில்லை, அது வரும்போது, ​​பேசலாம். வந்தாலும் அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பாதிக்காது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சிஏஏவில் குடியுரிமை பெறுவதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை.

ஓராண்டில் அரசு பல சாதனைகளை மத்திய அரசு நிகழ்த்தி உள்ளது. 370 வது பிரிவை ரத்து செய்தது, ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவுதல், முத்தலாக் மற்றும் சிஏஏ ஆகியவற்றை கூறலாம்.

இந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து புலம்பெயர்ந்தோர் இந்தியாவில் தஞ்சம் கோருகின்றனர். 370 வது பிரிவு தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பு சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ராம் ஜன்மபூமி வழக்கு நாட்டின் பழமையான வழக்கு.

கடந்த 60 ஆண்டுகளாக, இந்த பிரச்சினைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சமூக நீதி மற்றும் மக்கள் உணர்வு ஆகியவற்றுடன் கலந்து இருக்கின்றன என்று கூறினார்.