பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படாது! நிதின் கட்கரி

டில்லி:

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

நாட்டின் பொருளதாரம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வாகன உற்பத்தித் தொழில் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் நிதிக்கொள்கை மற்றும் ஜிஎஸ்டி வரி, வாகனங்களுக் கான இன்சூரன்ஸ் அதிகரிப்பு, மின்சார வாகனம் அறிவிப்பு  போன்ற காரணங்களால் வாகன விற்பனை 50 சதவிகிதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.

இதன் காரணமாக பல வாகன நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. 40 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு தற்போது வாகன விற்பனை சரிந்துள்ளதாக பிரபல தொழிலதிபர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் கட்காரி கூறியுள்ளார்.

மேலும்,  ரூ.4.50 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ஆட்டோமொபைல் துறை, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இருந்தாலும் டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கும் எண்ணம் ஏதும் அரசிடம் இல்லை. வாகனத் தொழில் செழித்தோங்க அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் கூறினார்.

அதே வேளையில்  அரசு சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதில், முதலாவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவும், இரண்டாவதாக சுற்றுச்சூழல் பாதிப்பும், மூன்றாவதாக சாலை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக, ஆட்டோமொபைல் துறை, எரிபொருள் சார்ந்ததில் இருந்து மாற வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வாகனங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது. கடந்த 2018 ம் ஆண்டில், உலகில் மாசு அதிகம் உள்ள நகராக டில்லி இருந்தது. இந்த பிரச்னை சமாளிக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. அதைத் தொடர்ந்து, டில்லியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு 29 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியவர், தேச நலனுக்காக சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி