“கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி:

மிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை,   “நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை”  மத்திய கலாச்சார துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக  பதில் தெரிவித்து உள்ளார்.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, தமிழர்களின் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற வியப்பூட்டும் தகவல்கள்  அகழ்வாய்வு முடிவுகளில் வெளிப்பட்டு உள்ளன.  கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே  தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தது ஆய்வுகளின்போது கிடைத்த சான்றுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

இதன் காரணமாக,  கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி கேள்வி எழுப்பினார் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதில், கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரும் மக்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா, அங்கு சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என கூறப்பட்டு உள்ளது.

மேலும், அருங்காட்சியகம் குறித்த கேள்விக்கு கீழடி அருகில் மாநில அரசு அருங்காட்சியகம் ஒன்று அமைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.