சுதந்திர தினக் கொண்டாட்டம் – பிளாஸ்டிக் கொடிகள் கிடையாது!

சென்னை: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான மாநில அரசின் தடையால், மொத்த வியாபாரிகள் கடந்த காலங்களில் அதிகம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்குப் பதிலாக, தற்போது காகிதம் மற்றும் துணி கொடிகளுக்கு மாறிவிட்டனர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த காலங்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது அதிகளவில் பிளாஸ்டிக் கொடிகளே விற்பனைக்கு வரும். ஆனால், கடந்த ஜனவரி 1 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்தது.

இதனையடுத்து கொடி விற்பனையாளர்களும் மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த குடியரசு தினத்திற்காக தயார்செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொடிகளில் மிச்சம் இருப்பவை மறைமுகமாக விற்கப்பட்டாலும், அதை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லையாம்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கண்டறியப்பட்டால் விதிக்கப்படும் பெரும் அபராதமே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், பிளாஸ்டிக் கொடிகளை குறிவைத்து அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பாக குறிப்பிட்ட புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.