இந்த பிறந்தநாளிலும் கட்சி அறிவிப்பு வராது!: ரஜினி சூசகம்!:  

ட்சி பெயர்  மற்றும் துவக்கவிழா குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் 12 அன்று ரஜினி வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அப்படியேதும் அறிவிப்பு வராது என்று ரஜினி சூசகமாக தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக  நடைபெற்றது.

சர்கார் படத்தின் இசை வெளியீடு போலவே,  பேட்ட இசையையும் வித்தியாசமான முறையில் ரசிகர்களே வெளியிட்டனர்.

விழாவில் ரஜினி பேசியதாவது : “முதலில் கஜா புயலால் உயிரிழந்த, அங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு உதவியர்களுக்கு நன்றி.  கஜா புயலால்  பேரிழவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, அரசங்காத்தால் மட்டும் நிவாரணம் செய்ய முடியும் என்று நினைத்தால் தவறாகிவிடும். அனைவரும் இணைந்து   உதவ வேண்டும்.

2.0 திரைப்படம் வெளியாகி பெரும்  வெற்றி பெற்றிருக்கிறது.  அனைவருக்கும் நன்றி. இந்த பாராட்டு அனைத்தும் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கு தான் சேரும்.

பேட்ட படத்தில் சிறந்த நடிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன். ஒரு நல்ல நடிகனுடன்  இணைந்த நடித்த அனுபவம் கிடைத்தது.

குழந்தைக்கு தாடி மீசை வளர்ந்தால் எப்படியிருக்கும், அந்தமாதிரி ஒரு நல்ல மனிதர் சசிகுமார். த்ரிஷா என்றும் இளமையாக இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் கதை திறன் வித்தியாசமாக இருக்கும். என்னை நடிக்க வைத்த கார்த்திக் சுப்பராஜ், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன், அழகாக இளைமையாக காட்டிய ஔிப்பதிவாளர் திரு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

அனிருத், அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என தனுஷ் சொன்னார். அது நடக்கும்.

சாப்பாடு, தூக்கம், பேச்சு, அட்வைஸ் உள்ளிட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது. அப்படி இல்லாமல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்று பேசிய ரஜினி, இறுதியாக, “பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்திப்பதில்லை. இந்தாண்டும் அப்படித்தான், ரசிகர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம்” என்று பேசி முடித்தார்.

இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் அவர் அரசியலுக்கு வருவார் என்று இருபது வருடங்களுக்கு மேல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் கடந்த (2017ம்) வருடம் டிசம்பர் 31ம் தேதிதான், “தனிக்கட்சி துவக்கி தமிழகத்தின் 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்” என்று ரஜினி அறிவித்தார்.

இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த ஒரு வருடங்களாக முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பலவற்றில் ரஜினி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இவை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதும் நோ கமெண்ட்ஸ் என்றும் தற்போது பட வேலைகளில் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மிகச்சில பிரச்சினைகளில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையையே ஏற்படுத்தின. தவிர அவ்வப்போது அரசியல் பிரமுகர்கள், சமூகசேவையாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று சிலரை தனது போயஸ் இல்ல வீட்டுக்கு அழைத்துப் பேசியதோடு சரி. சமீபத்தில் அப்படி பத்திரிகையாளர் மாலனை அழைத்துப் பேசினார். அதே நேரம் அப்போது அரசியல் பேசவில்லை என்று மாலன் தெரிவித்தார்.

இதற்கிடையே காலா, 2.o என்ற அவரது திரைப்படங்கள் வெளியாகின. அடுத்து வரும் (2019) பொங்கல் அன்று பேட்ட படம் வெளியாகிறது. அதற்கு அடுத்ததாக லைக்கா தயாரிப்பிலேயே புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனாலும், “அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவை. அதனால் புதிய  படங்களை ரஜினி ஒப்புக்கொண்டு வருகிறார்.

ஆனால் பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது  அரசியல் குறித்து பேசுவார் கட்சி துவங்கும் தேதியையும், கட்சி பெயரையும் அறிவிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அன்று இல்லாவிட்டாலும் அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று இதுகுறித்து அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் நேற்று நடந்த பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து ரஜினி ஏதும் பேசவில்லை. அதோடு, வரும் பிறந்தநாள் அன்றும் வழக்கம்போல ரசிகர்களை சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்.

இது குறித்து ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசியபோது, “கட்சிதுவக்கும் நாள், கட்சியின் பெயர் போன்றவற்றை ட்விட்டரில் அறிவிப்பது என்பது சரியாக இருக்காது. ஆகவே அப்படி நடக்காது. ஆனால் இந்த பிறந்தநாளாவது ரஜினி, ரசிகர்களை சந்தித்து அரசியல் குறித்து அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடுவார் என்று நினைத்தோம். ரசிகர்கள் சந்திப்பு இல்லை என்று அவர் தெரிவித்ததன் மூலம் அரசியல் அறிவிப்பு இருக்காது என்பது தெரிந்துவிட்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அதே நேரம், “பேட்ட படம் வெளியான பிறகு கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார்” என்று சில ரசிகர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள்.