download (1)

சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது  மறுநாள் 17ஆம் தேதி அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு கடந்த 20ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கடும் ஆளும் – எதிர்க்கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர், “தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   உரிய காலத்தில் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்தினால் வட்டி மானியம் தொடர்ந்து வழக்கப்படும். உணவு தானிய உற்பத்தி 63% அதிகரித்துள்ளது. நுண்ணுயிர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 5693 ஏரிகள் பொதுப் பணித் துறை மூலம் ரூ.2,870 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன.  கடல் அரிப்பை தடுக்க 37 இடங்களில் ரூ.116 கோடியில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு  தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்ந்து அளிக்கப்படும்.  உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்களில் இடை நிற்றல் 5 ஆண்டுகளில் 11 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்க ரூ.202 கோடியில் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் அளிக்கப்படுகிறது” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அவர் தற்போது தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.