ராஞ்சி: ராமர் கோவில் கட்டுவதை இனி உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு வரும் 30ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, அதன் பின்னர் ஓட்டுகள் அனைத்தும் அடுத்த மாதம் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந் நிலையில், பிஷ்ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் இனி தடுக்க முடியாது. ராமர் கோவில் கட்டுவதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற ஷியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறார். ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதை அறிய முடிகிறது.

துப்பாக்கி ஏந்துவதை மத்தியில் உள்ள பாஜகவும், மாநில அரசும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை ரபேல் போர் விமானத்தால் அழிப்போம் என்றார்.