தான் நேர்மையானவர்களுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று முழங்கிய ‘மய்ய’ நடிகரின் கூட்டணியில் இடம்பெற்ற சரத்குமார், செக் மோசடி வழக்கில் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை வைத்து, தற்போது கமலஹாசன் பரவலான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால், இதைவிட கமலஹாசன் விஷயத்தில் வேறு அடிப்படைகளை கவனிக்க வேண்டியுள்ளது. சினிமாத்துறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இயங்கி வருபவர் என்று கூறப்படும் கமலஹாசன், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து கவலைப்படாமல், இவ்வளவு ஆடம்பரமாக கட்சி நடத்துகிறாரே! என்ற ஆச்சர்யங்கள் எழாமல் இல்லை. அதுதொடர்பாக சில விஷயங்களையும், சமூக வலைதளங்களில் சிலர் பேசி வருகிறார்கள் என்பது வேறு விஷயம்!

சில அரசியல் & சமூகப் பார்வையாளர்கள் இதுகுறித்து தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: அவர் கட்சியைச் சேர்ந்தவர்கள், எங்கள் தலைவர், கட்சிக் கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில்தான் நடத்துகிறார். அதற்கு வந்துபோவதற்கான தனக்கான செலவுகளை அவர்தான் பார்த்துக்கொள்கிறார்; எங்கள் தலையில் சுமத்துவதில்லை. மற்ற செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பெருமையுடன்.

மேலும், கமலஹாசன் தனது குடும்ப சொத்துகளை அடகுவைத்தும் செலவு செய்கிறார் என்றும் ப‍ேசுகின்றனர். சரி, அது இருக்கட்டும்.

கட்சியின் பெரும்பாலான செலவுகளை, கட்சிக்காரர்களை வைத்தே பார்த்துக் கொள்கிறார் மற்றும் முறைகேடான இடத்திலிருந்து வரும் நிதியாதாரங்களை தவிர்ப்பதன் மூலம், ஊழலை முளையிலேயே களைகிறார் என்றெல்லாம் பெருமை பேசும் கட்சிக்காரர்கள், ஒரு முக்கியமான விஷயத்தை கவனிப்பதில்லை.

நட்சத்திர ஓட்டல் சந்திப்பு உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கட்சிக்காரர்களே பார்த்துக் கொள்கிறார்கள் எனும்போது, அந்தக் கட்சிக்காரர்கள் எவ்வளவு வசதியாக இருக்க வேண்டுமென்ற ஒரு கருத்து எழுகிறது. ஆக, கமலஹாசன் கட்சிக்கு நிர்வாகியாக இருக்க வேண்டுமெனில், ஒருவர் கட்டாயம் செல்வந்தராக இருக்க வேண்டும். அவர், எந்த முறையில் செல்வந்தர் ஆனார் என்பதெல்லாம் ‘மய்ய’ கட்சியின் தலைவருக்கு தேவையில்லாதது!

மேலும், அவர் இத்தேர்தலில், தனது கட்சி சார்பாக நிறுத்திய வேட்பாளர்கள் பலரும் வசதியானவர்கள். அருப்புக்கோட்டை போன்ற தொகுதிகளில் நின்ற வேட்பாளர்கள் பெரிய தொழிலதிபர்கள்! அந்த வசதியானவர்கள் அனைவரும் நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தானா? அல்லது சம்பாதிப்பவர்களா? என்ற கேள்விகள் இல்லாமலா இருக்கும்!

மீண்டும் கூட்டணி என்று வந்தாலும், சரத்குமார் ஒரு பக்கம் என்றால், கமலின் இன்னொரு கூட்டணி பார்ட்னர் பச்சைமுத்து, எப்படி பணக்காரர் ஆனார்? என்று உலவும் கதைகளை மறைக்க முடியுமா? இவர்கள் தங்களுடன் வாருங்கள் என்று அழைத்த தேமுதிக, நேர்மையான அரசியல் பாதையைக் கொண்ட கட்சியா? இன்னும்கூட சில கட்சிகளை அவர்கள் அழைத்தார்கள்! அந்தக் கட்சிகள் எல்லாம் எப்படியானவை?

இவ்வளவு ஏன்? திமுகவுடன் கூட இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்!

ஆக, மாற்று அரசியல் என்று முழக்கத்திற்காக பேசுபவர்களிடம், நடைமுறையில், அதற்கான சிறிதளவு செயல்திட்டம்கூட இருப்பதில்லை. அரசியல் அறியாத சில சதவிகித மக்களின் வாக்குகளைப் பிரிப்பது தவிர, சமூகத்திற்கு இவர்கள் செய்யும் நன்மை என்று எதுவுமில்லை என்கிறனர் அந்த விமர்சகர்கள்.