பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவ அமைப்புகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தல் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

“மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள், கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகள் மற்றும் அதுதொடர்பான அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தல்கூடாது” என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தின் சில தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதாக வெளியான செய்திகள் மற்றும் புகார்களையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி மறுப்பதானது, 2017ம் ஆண்டின் கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சட்டப்பிரிவு 11ஐ மீறுவதாகும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும், மாநில மற்றும் தேசிய மருத்துவத் திட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.