டில்லி:

நீதிபதி லோயாமரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கிடையாது என்று, வழக்கை தள்ளுபடி செய்து  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா வழக்குகளை விசாரித்து வந்த மும்பை நீதிமன்ற நீதிபதி பிரிஜ்பால் லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்திய வழக்கில், 2005ல் போலீசார் கைது செய்தனர். அவர், 2005 நவம்பர் மாதம் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இவரை போலீசார், ‘என்கவுன்டர்’ செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயோ, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி   மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றபோது, நீதிபதி லோயோ திடீரென மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அவரது மரணம் பல்வேறு சர்ச்சை களை ஏற்படுத்திய நிலையில், தேசிய புலனாய்வு  விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு கூறுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்றைய தீர்ப்பில் வழக்கை தள்ளுபடி செய்தும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்றும் கூறி உள்ளது.