டில்லி

கார்த்தி சிதம்பரத்தின் ஜோர் பாக் இல்லத்தை ஊழல் பணத்தில் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என ஊழல் தடுப்பு சட்ட தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு விதிகளை மீறி அன்னிய முதலீடு பெற உதவியதாக ப சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ப சிதம்பரம் இந்த விதிமீறலுக்கு அவர் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனைப்படி உதவியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.  தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார்.

கட்ந்த ஆகஸ்ட் மாதம் டில்லியில் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான ஜோர் பாக் இல்லம் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டதால் அதை அமலாக்கத் துறை கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது.  மேலும் அங்கு வசித்து வரும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.   இந்த உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சார்பில் ஊழல் தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதியான மன்மோகன் சிங், “அமலாக்கப்பிரிவின் குற்றச்சாட்டின்படி கார்த்தி சிதம்பரத்தின் ஜோர் பாக் இல்லம் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை.  அத்துடன் கார்த்தி சிதம்பரம் இந்த இல்லத்தை விற்கப்போவதாக எவ்வித முடிவுக்கும் வரவில்லை  மேலும் கார்த்தி சிதம்பரம் இந்த இல்லத்தை வழக்கு முடியும் வரை விற்கப்போவதில்லை என உறுதி அளித்துள்ளார்.  ஆகவே இது குறித்து எவ்வித இடைக்கால தீர்ப்பு வழங்கவும் தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளது.