திருப்பதி கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

--

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் உள்ளது. அதன் காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை.

படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. இதனிடையே, திருப்பதி கோயிலில் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த சம்பவம் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி கோவில் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்று தலைமை அர்ச்சகர் அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந் நிலையில், திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் 70 பேர் குணமடைந்து உள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர பிரதேச காவலர்கள்.

கோவிலுக்கு வருகை தந்த  பக்தர்களுக்கு கொரோனா ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், கோவிலை மூட எந்தவொரு திட்டமுமில்லை.  மூத்த அர்ச்சகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அர்ச்சர்களுக்கும், ஊழியர்களுக்கும் தனியாக தங்குமிடம், உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.