சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணிகளை அமைப்பதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, தேமுதிக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம்.  அதிமுக உடனான பேச்சுவார்த்தை நல்லமுறையில் உள்ளது.  நாங்கள் எத்தனை தொகுதிகள் பெறுகிறோமோ, அத்தனையிலும் வெற்றி பெறுவோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அமமுக, அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு, சசிகலா தினகரன் – பலம், பலவீனம் அதிமுக-விற்குத் தான் தெரியும். அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சிடி ரவியின் பதில் கூறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது,  “சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

மேலும்,  “எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிலிருந்து எழுச்சி இப்போதும் காணமுடிகிறது.தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.விருப்பமனு பெற இறுதி நாள் என்பதால் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் இங்கு கூடியுள்ளனர். இதிலிருந்து ஒரு கட்சி எவ்வளவு எழுச்சியாக உள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது”   “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குள்ள நரிக் கூட்டம். அதிமுக சிங்கங்கள் என்பதால் அமமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுகவுடன் அமமுகவை இணைக்க வாய்ப்பே இல்லை. அதிமுகவிற்கு என்று கொள்கை, லட்சியம் இருக்கிறது என்று தடாலடியாக பதில் தெரிவித்தார்.

மேலும், “அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது என்றவர்,  கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்கள் கூட்டணியில் பாஜக ஒரு அங்கம் என்று கூறியதுடன், பாஜகவுடனான  சுமுகமாக நடக்கிறது என்று கூறினார்.