ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்: பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தல்

டெல்லி: மத்திய அரசு வழங்காமல் வைத்திருக்கும் ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே நாடு,ஒரே சந்தை என்ற நடைமுறை 2017ம் ஆண்டின் ஜூலை 1ம் தேதியன்று ஜிஎஸ்டி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. 4 அடுக்குகளின் கீழ் அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி கொண்டு வரப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம் தொடர்பான 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடைபெற்றது. நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான மாநில அரசு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரியை திருப்பித் தருமாறு வலியுறுத்தி உள்ளன. முன்னதாக அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு 8,150 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியது.

கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான மணிஷ்சிசோடியா வலியுறுத்தினார். 2001ம் ஆண்டு முதல் டெல்லிக்கு 325 கோடி மட்டுமே மத்திய அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டது என்றார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதாவது: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு இலவச கடன் கொடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடியின் போது எழுகிற சுமையை மத்திய, மாநில அரசுகள் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய விவரங்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா கூறியிருப்பதாவது: வரியை உயர்த்துவது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்படவில்லை.

பிப்ரவரி மாதத்துக்கு பிறகு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய போதுமான தொகை கூட மத்திய அரசிடம் இல்லை. லாட்டரிகளுக்கு ஒரு ஜிஎஸ்டி வரி என்பதற்கு கூட்டத்தில் ஆதரவு இருந்ததாக ராஜஸ்தான் அமைச்சர் சாந்திகுமார் தாரிவால் கூறியிருக்கிறார்.

இருப்பினும் என்ன வரிவிகிதம் என்பது தொடர்பான விவாதங்கள் இன்னும் போய்க் கொண்டிருக்கின்றன என்றார். சில சரக்கு பொருட்களுக்கு வரியை உயர்த்த மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் பிரஜேந்திர சிங் ரதோர் கூறியிருக்கிறார்.

மாதா மாதம் மாநில அரசுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி இழப்பை மத்திய அரசு உடனடியாக நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும் என்று சத்திஸ்கர் மாநில பிரதிநிதி சிங் தியோ வலியுறுத்தி இருக்கிறார்.

பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரித் பாதல் பேசுகையில், எதிர்பார்க்கப்பட்டதை விட மத்திய அரசின் வருவாய் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை காலதாமதம் என்பதால் கடன் சுமை அதிகரிக்கும் என்றார்.