புதுடெல்லி: பிரதமரின் உள்நாட்டு சுற்றுப் பயணங்களுக்கான செலவின விபரங்களை, பிரதமர் அலுவலகம் பராமரிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அணில கல்காலி, கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் முதல், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பணயங்களின் செலவின விபரங்களைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பிரதமரின் உள்நாட்டுப் பயணச் செலவினங்கள் குறித்த விபரங்களை, பிரதமர் அலுவலகம் பராமரிப்பதில்லை.

ஏனெனில், பிரதமரின் உள்நாட்டுப் பயணத் திட்டங்கள் பல்வேறான பொது அமைப்புகளால் திட்டமிடப்படுவதால், அவை குறித்த செலவின விபரங்களை ஒரு ஒற்றை அதிகார அமைப்பு பராமரிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் ‍தேர்தல் பிரச்சார பயணத்திட்டங்கள் அலுவல்பூர்வமானவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செலவின விபரங்களை, பிரதமர் அலுவலக வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி