நெருக்கடி நிலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முரண்பட்ட நிலைப்பாடுகள் குறித்து கட்டுரையாளர் ஏ.ஜி.நூராணி கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்;

கடந்த 1975ம் ஆண்டு இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அந்த நினைவு நாளை, ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர், நெருக்கடி நிலையை எதிர்த்து தங்களின் தலைவர்கள் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து அனுசரிக்கின்றனர்.

இந்திரா காந்தியின் அந்த செயலை அவர்கள் ஒரு சாதாரண அரசியல் தவறாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, அதை ஜனநாயகத்தின் மீது இழைக்கப்பட்ட ஒரு பாவச் செயலாகவும் பார்க்கின்றனர்.

ஆனால், வரலாற்று தரவுகளின்படி பார்த்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பிலிருந்து எந்த குறிப்பிடத்தக்க கண்டனமும் இந்திரா காந்திக்கு விடுக்கப்படவில்லை. பதிலாக, ஆர்எஸ்எஸ் தலைவர் தியோரஸின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி பல ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், சிறையிலிருந்து வெளிவரும் பொருட்டு அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதினார்கள்.

அரசிடமிருந்து மன்னிப்பு வேண்டுவோர்களுக்காக ஒரு தனி விண்ணப்ப படிவமே இருந்தது. இதில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் மிக மகிழ்ச்சியாக கையெழுத்திட்டனர். சிலரோ, அந்தப் படிவம் வந்து சேரும்வரை காத்திருக்க பொறுமையில்லாமல் தாங்களே தங்களுக்குத் தெரிந்த வழியில் மன்னிப்பு கோரினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.