காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் தூதராக செயல்படவேண்டும் என எந்த கோரிக்கையும் அமெரிக்க அதிபரிடம் வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இன்று சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் உதவும் படியும், சமரச தூதுவராக செயல்படும் படியும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதே கோரிக்கையை இந்திய பிரதமர் மோடியும் தன்னிடம் வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா இரட்டை நிலைபாடு எடுப்பது போன்று தெரிவதாக காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் தூதராக செயல்படவேண்டும் என எந்த கோரிக்கையும் அமெரிக்க அதிபரிடம் வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் மேற்கொண்டுள்ள பதிவில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, சமரச தூதுவராக தாம் செயல்பட தாம் விரும்புவதாகவும், இரு நாடுகளும் கோரிக்கை வைப்பின் அவ்வாறு செயல்பட தாம் தயார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படி எந்த ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் முன்வைக்கப்படவில்லை. இரு நாடுகளிடையேயான பிரச்சனைகள் உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்க்கப்படும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம் இதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளதை, ANI நிறுவனம் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.