தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை:

மிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் இன்று உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதி களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி  தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், இன்று, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள  தீர்ப்பைப் பின்பற்றி இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையரை பணிகளை முடித்த பின்னரே தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய மனுவை ஏற்றுக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், அதன்மீது வரும் புதன்கிழமை யன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக=  அறிவித்து உள்ளது.