8 வழிச்சாலை: நிலம் கையகப்டுத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை – சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்பணி நடந்துவருகிறது. இந்த சாலை அமைக்க விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சாலை அமையும் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் விளை நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனாலும் நிலம் கையகப்படுத்தும்பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இத்திட்டத்தை எதிர்ப்போர் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்கிறது.
இந்த நிலையில், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றியதுடன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12க்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் நிலம் கையகப்படும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.