வாஷிங்டன்: காஷ்மீரில் எந்த பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது கோபத்தைத் தூண்டும் நடவடிக்கையிலோ பாகிஸ்தான் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க காங்கிரசின் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் குழு.

மேலும், எல்லைத்தாண்டிய ஊடுருவல் நடவடிக்கைகளை ஆதரிக்கக்கூடாது என்று கூறியுள்ளதோடு, பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, காஷ்மீரில் நடைபெறும் கைது, வீட்டுச்சிறை மற்றும் தகவல்தொடர்பு துண்டிப்பு நடவடிக்கைகளை முன்வைத்து, அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், அரசியல் சாசன கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனறும் இந்தியாவை அறிவுறுத்தியிருந்தது அமெரிக்கா.

இந்நிலையில், “அனைத்து தரப்பாரும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்படுவதோடு, எல்லைத்தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.