பயிற்சியாளருடன் எனக்கு எந்த “லடாயும்” இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

 

லண்டன் :

ந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை மறுத்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தான் தற்போது லண்டனில் உள்ள கேட்ரொட் விளையாட்டு அறிவியல் மையத்தில் (GCCI) பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், போட்டிக்கு தேவையான உடற் தகுதியை மேம்படுத்த, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு பயிற்சி எடுத்துவருவதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும், தனக்கும் தனது பெற்றோருக்கும் மனக்கசப்பு என்று வந்த செய்தி முற்றிலும் அபத்தமானது, அத்துடன், எனது தாயும் தந்தையும் தான் நான் இந்தளவிற்கு உயர காரணமாக இருந்தவர்கள் அவர்களுடன் நான் எந்த சச்சரவிலும் ஈடுபடவில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுபோல், எனது பயிற்சியாளர் கோபிசந்துடனும் எனக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது என்று அந்த ட்வீட்-ல் பதிவிட்டுள்ளார், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இதுபோல் தவறான செய்திகளை வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து இதுநாள் வரை எந்த இடத்திற்கு சென்றாலும், தனது பெற்றோருடன் செல்வதையே வழக்கமாக கொண்டிருந்த நிலையில், இப்போது, தனியாக லண்டன் சென்றிருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.