குடியுரிமை சட்டத்திருத்தம்: மறுக்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை.. மத்திய அரசு தகவல்

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க  குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட, ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், அரசிதழ் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டம் வியாழன் முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் அரசுகள், சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது:

மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்க  மாநிலங்களுக்கு அதிகாரம் கிடையாது. பொதுப் பட்டியலின் கீழ் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம், ரயில்வே, குடியுரிமை உட்பட 97 விஷயங்கள் இடம் பெறும்.

எனவே பட்டியலில் இடம்பெற்றிருக்கும் குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை, மாநில அரசுகள் நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும் என்றார்.