சென்னை: மருத்துவ கல்வி நிறுவனத்தில் காவி மயமாக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

சென்னை:

சென்னை எம்ஜிஆர்  மருத்துவ பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கருத்தரங்கம் நடக்க இருந்தது. இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி.யும் ஒரு அங்கம் என்பது தெரியவந்தது.

இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவியது. மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு காவி பூசப்படுவதை ஏற்க முடியாது. அதனால் இந்த கருத்தரங்களை புறக்கணிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சிலர் சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுப்பையாவுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆன்காலஜி துறைத் தலைவரான சுப்பையா ஏபிவிபி அமைப்பின் மாநில தலைவராகவும் உள்ளார்.

இந்த கருத்தரங்ககை நடத்த அவர் எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. அரசியல் சார்ந்த அமைப்புடன் இணைந்து அரசு கல்வி நிறுவனத்தில் நிகழ்ச்சி நடத்த எப்படி அனுதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘‘மருத்துவ கல்வி நிறுவனம் காவி மயமாவதை அனுமதிக்கமாட்டோம். இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த இருந்தோம். ஆனால் அதற்குள் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது’’ என்று சமூக நீதிக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.