டில்லி:

கடந்த 9 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி டில்லி மெட்ரோ ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் மற்றும் எப்இஎம்சி பிரதீபா நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடந்து வருகிறது. தொழிலாளர் ஒப்பந்ததாரரான ஆஷிஷ் திவேதி ரூ. 25 கோடி வரை நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு எப்இஎம்சி பிரதீபா நிறுவனத்தினர் தான் சம்பளம் கொடுத்து வந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சம்பள நிலுவை காரணமாக நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சம்பளம் தருவதாக உறுதியளித்தனர். அப்போது பகுதி சம்பளம் வழங்கப்பட்டது ’’ என்று திரிவேதி தெரிவித்தார். இவரிடம் 300 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இது குறித்து மெட்ரோ ரெயில்வே நிர்வாக செயல் இயக்குனர் அனுஜ் தயாள் கூறுகையில், ‘‘ மெட்ரோ ரெயில்வே ஒப்பந்ததாரரான எப்இஎம்சி பிரதீபா நிறுவன தொழிலாளர் கடந்த சில நாட்களாக சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மெட்ரோ ரெயில்வேயின் நேரடி தொழிலாளர்கள் கிடையாது. அவர்களுக்கு மெட்ரோ ரெயில்வே நேரடியாக சம்பளம் வழங்கியதில்லை.

அவர்களது நிலுவை உடனடியாக பட்டுவாடா செய்ய ஒப்பந்ததாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக தனிநபர் யாரும் புகார் அளிக்கவில்லை. இந்த பிரச்னை கான்ட்ராக்டருக்கும் சப் கான்ட்ராக்டருக்கும் இடையிலான பிரச்னை’’ என்றார்.

கொட்டும் மழையிலும் தொழிலாளர் கான்ட்ராக்டர்கள் 25 பேருடன் ஆயிரத்து 600 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிபாதி மேலும் கூறுகையில், ‘‘எனது கீழ் வேலை செய்த 250 தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி 7 மாத சம்பள நிலுவையை தீர்த்துவிட்டேன். நான் தற்போது கடனில் இருக்கிறேன். என்னால் அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ தற்போதைய சூழ்நிலையில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 9 ரெயில் நிலையங்களிலும் எவ்வித பணியும் நடைபெறவில்லை. ஏற்கனவே பல மாதங்களாக இதே நிலை தான் நீடிக்கிறது. எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் தண்டாவளத்தில் படுத்து மெட்ரோ ரெயில் சேவையை முடக்குவோம்’’ என்றார்.

ஆனால், மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தாமதமின்றி நடந்து வருகிறது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் உதவி செய்யும் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இதனால் திட்டமிட்ட பணிகளில் எவ்வித தொய்வும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.