மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல்நிலை இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ அமைப்பின் இத்தகைய செயலால், ரஞ்சிப் போட்டி உள்ளிட்டவைகளில் ஆடும் பல முதல்நிலை கிரிக்கெட் வீரர்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், அவர்களுடைய குடும்பத்திற்கான இதர வருமான வழிகளும் அடைப்பட்டிருக்கக்கூடிய சூழலில், பிசிசிஐ அமைப்பிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் தடைப்பட்டு போயுள்ளதால், நிலைமை மோசமாகியுள்ளது.
மொத்தம் 950 முதல்நிலை கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ அமைப்பிடமிருந்து ஊதியம் தொடர்பாக ஏதேனும் நல்ல செய்தி வருமா? என்று காத்துக்கொண்டுள்ளனர் என்பது ஒரு கொடுமையான உண்மை.
அவர்களுக்கு, கடந்த சீசனுக்கான போட்டிக் கட்டணமே இன்னும் கிடைக்கவில்லை. இந்தியக் கிரிக்கெட்டின் வருடாந்திர சம்பாத்தியத்திலிருந்து வீரர்களுக்கான பங்குத் தொகைகளை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது பிசிசிஐ.

வீரர்களுக்கு மட்டுமல்ல, பல நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கும் இந்த நிலைதான்! கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளுக்கான நிலுவைத் தொகைகள் வந்துசேரவில்லை அவர்களுக்கு!
இந்த பரிதாப நிலை ஏன் என்பதற்கான விளக்கம், பிசிசிஐ தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படவில்லை. இதை பலரால் வெளிப்படையாக பேச முடியவில்லை. ஏதேனும் நல்ல செய்தி வராதா? என்று தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு பிசிசிஐ அமைப்பு உதவலாம் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால், தன் நாட்டு கிரிக்‍கெட் வீரர்களுக்கே முறையாக ஊதியம் தராத அமைப்பா மற்ற நாடுகளுக்கு உதவிசெய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.