அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை! ஜெயக்குமார் மறுப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், காரமும் இல்லை, ரசமும் இல்லை, சுவாரசியம் மட்டுமே இருந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள்  கூட்டத்திற்கு வந்த முதல்வர், துணைமுதல்வர் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்,  அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28ஆம் தேதியன்று கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் , “கட்சிக்காரர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும், சதிகளுக்கும் இடையே கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி யிருக்கிறோம். அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஒற்றுமையாக இருந்து மகத்தான வெற்றிபெற வேண்டுமென்ற அடிப்படையில்தான் விவாதம் இருந்தது என்று தெரிவித்தார்.

ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக, சிவிசண்முகத்துக்கும், கே.பி.முனுசாமிக்கும் இடையே காரசாரமாக நடைபெற்ற  விவாதங்கள்   குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்தவர்,  கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை, சுவாரசியம் மட்டுமே இருந்தது என்றும், நேற்றைய  கூட்டத்தில் சசிகலா பற்றி பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மேலும், வழக்கம்போலதான் செயற்குழு கூடுகிறதே தவிர, வேறு  ஒன்றும் விசேஷம் இல்லை”

இவ்வாறு அவர் கூறினார்.