லாகூர்: கர்தார்பூர் ஸ்தலத்திற்கு புனிதப் பணயம் செல்லும் இந்திய சீக்கிய யாத்ரிகர்கள், குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டும், எந்த சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் ஸ்தலத்திற்கு வரும் இந்திய சீக்கிய யாத்ரிகர்கள், பாஸ்போர்ட் வைத்திருப்பதுடன், ஒவ்வொருவரும் சேவைக் கட்டணமாக 20 அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையை செலுத்த வேண்டுமென தனது விதிமுறைகளில் இடம்பெற்ற அம்சங்களாக பாகிஸ்தான் அறிவித்தது.

ஆனால், இந்த சேவைக் கட்டண விவகாரத்திற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அச்சேவை கட்டண விதிமுறையை நீக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலா வருவாயை பெரியளவில் கணக்குப்போடும் பாகிஸ்தான், இந்தியாவின் ஆட்‍சேபத்தைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது, கர்தார்பூர் ஸ்தலத்திற்கான பாதையை திறந்துவைக்கும் துவக்க நாளான நவம்பர் 9 மற்றும் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 12 ஆகிய இருதேதிகளில் மட்டும் இந்திய யாத்ரிகர்கள் சேவைக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இன்று நடைபெறும் பாதை திறப்பு விழாவில், இந்தியாவின் குர்தாஸ்பூரில் நரேந்திர மோடியும், பாகிஸ்தானின் கர்தார்பூரில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொண்டு திறந்துவைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.