பள்ளிகளில் ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 18 பேர் கொண்ட குழு, கடந்த மாதம் தமது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந் நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் செயல்படத் தொடங்கும். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உள்கட்டமைப்பு இருப்பதால், ஷிப்ட் முறையில் வகுப்புகள் இருக்காது.

சமூக இடைவெளியை உறுதிப்படுத்த பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையிலான வகுப்பறைகள் உள்ளன. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் பள்ளி கல்விக்கான முன்னேற்ற வழியை மதிப்பீடு செய்து பரிந்துரைக்க மாநில அரசு பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் கீழ் மற்றொரு குழுவை அமைத்துள்ளது என்றார்.