சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்காத முஸ்லீம் நாடுகள்!

--

ஜெனிவா: சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கஸக் மற்றும் உய்குர் இன முஸ்லீம்களின் மீது சீன அரசாங்கம் மேற்கொண்டுவரும் மனிதஉரிமை மீறல் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு முஸ்லீம் நாடுகூட கண்டிக்கவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார் கட்டுரையாளர் ஜைனாப் சிக்கந்தர்.

அவர் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளில் மொத்தம் 22 நாடுகள் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கஸக் மற்றும் உய்குர் முஸ்லீம்கள் மீது சீனா நடத்திவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை கண்டித்தன மற்றும் சீனா தனது நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தின.

ஆனால், இதில் மாபெரும் வெட்கக்கேடு என்னவென்றால், அப்படி கண்டித்த நாடுகளுள் ஒன்றுகூட முஸ்லீம் நாடோ அல்லது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடோ கிடையாது. பொதுவாக, தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்திற்கு முதல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அந்தப் பரிசை முஸ்லீம்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

முஸ்லீம்களுக்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் அநீதியான நடவடிக்கைகளை, தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமாக கூறி, ஒவ்வொரு நாடும் நியாயப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் கொடுமை.

வளைகுடாப் பகுதியிலுள்ள மிக முக்கிய முஸ்லீம் நாடுகளான சவூதி அரேபியா, யூஏஇ, கத்தார் போன்றவையும், துருக்கி, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா போன்ற பல நாடுகள், சீனாவின் கொடுமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் வாய்மூடி மவுனிகளாக அமர்ந்திருக்கின்றன. இது மாபெரும் வெட்கக்கேடு” என்று குறிப்பிட்டுள்ளார்.