துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பமுடியவில்லை. இந் நிலையில் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்பும் வகையில் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை, லக்னோ, ஐதராபாத், டெல்லி, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கு நாளை முதல் 13ம் தேதி வரை விமான சேவைகள் ஆரம்பமாகும். அதேபோன்று, அபுதாபியில் இருந்து கொச்சி, துபாயில் இருந்து கோழிக்கோடு நகரங்களுக்கு விமான சேவைகள் தொடங்குகின்றன.
ஒவ்வொரு விமானங்களிலும் 200 பேர் பயணிக்கலாம். கிட்டத்தட்ட 197,000 இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திருப்பி அனுப்ப பதிவு செய்துள்ளனர். இந்த விமானங்களில் சமூக விலகலை நீக்குவதன் மூலம் மத்திய அரசானது அதிக பயணிகளை கொண்டு வர முயற்சிக்கிறது, இதனால் டிக்கெட் கட்டணங்களையும் குறைக்கலாம்.
ஆனால் சமூக விலகலை பின்பற்றினால், பயணி ஒருவர் 1400 டாலர் வரை விமான கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே அது வேண்டாம் என்ற பரிந்துரையை அதிகாரிகள் முன்கூட்டியே அரசுக்கு தெரிவித்து இருந்தனர்.
விமான பயணங்களில் தொழிலாளர்களுக்கு அதிக முன்னுரிமை தரப்படுகிறது. கையில் இருக்கும் சேமிப்பை செலவழிப்பதைவிட விரைவாக செல்ல விரும்புவோர், விரைவில் செல்லலாம் என்று டிராவல்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.