பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் கிடையாது : சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு

திருவனந்தபுரம்

பரிமலையில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் அமைக்கப்பட மாட்டாது என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


ஆண்டாண்டு காலமாக சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதான பெண்களுக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கேரள மாநிலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல பேரணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்த கேரள அரசு மிகவும் முயன்று வருகிறது. இது குறித்து ஐயப்பனை வளர்த்த பந்தள அரச குடும்பத்தினர் மற்றும் ஐயப்பன் கோவில் தந்திரிகள் ஆகியோருடன் கூட்டம் நடத்த அரசு முயன்றது ஆனால் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அவர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்ட் கூட்டம் இன்று நடந்தது. கூட்ட முடிவில் போர்டின் தலைவர் பத்மகுமார், “சபரிமலையில் பெண் பக்தர்களுக்காக எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளும் தேவசம் போர்டு செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் முறை மட்டுமே தொடரும்” என அறிவித்துள்ளார்.