சென்னை: ஆயுதபூஜைக்காக இந்த ஆண்டு சிறப்பு சந்தை கிடையாது என கோயம்பேடு சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் வினாயகர் சதுர்த்தி, பொங்கல், ஆயுதபூஜை போனற்  பண்டிகை காலங்களில், கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படுவது வழக்கம். ஆயுத பூஜைக்கும் பொரி, கடலை, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் விற்க சிறப்பு சந்தை அமைக்கப்படும். அப்போது, வியாபாரிகள், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கிச் செல்வர்.
ஆனால், நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, 7 மாதங்களுக்கு பிறகு தற்போது சில பகுதிகள் மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு சிறப்பு சந்தை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோயம்பேடு சந்தை  அதிகாரி, “கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டே கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. தற்போது மார்க்கெட் திறந்திருந்தாலும் 2 ஆயிரம் கடைகளில் 200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பு சந்தை அமைக்கப்படாது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வினாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு சந்தை அமைக்க கோயம்பேடு சந்தை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.