தருமபுரி: இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து  அண்ணா பல்கலைக்கழகத்து தேவையில்லை” – என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். மேலும்,  இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசு செய்ய வேண்டிய செயலை, ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தரே எப்படி செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில்,தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தருமபுரியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறியவர், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை குளித்து விளக்கம் அளித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், தற்போது வழங்கப்பட்டு வரும்  69 % இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும், அதுமட்டுமின்றி  சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.   சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும் என்று கூறியவர்,  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.