மும்பை: மராட்டிய மாநிலத்தில், கொரோனா முடக்கத்தால் சுணங்கிய ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுக்க, முத்திரைத் தாள் கட்டணத்தை 5% என்பதிலிருந்து 2% என்பதாக குறைப்பதற்கு மராட்டிய மாநில அரசு முடிவெடுத்த நிலையில், தேசிய ரியல் எஸ்டேட் அமைப்பு, முத்திரைத் தாள் கட்டணத்தை முற்றிலும் ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளது.

அந்த அமைப்பு NAREDCO என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பின் மராட்டிய மாநில உறுப்பினர்களின் கூட்டணி அந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை, செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், புதிய வீடுகளை வாங்குவோரின் சுமை குறைந்து, அவர்கள் தங்களுக்கான வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டிய மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகை, இந்தாண்டு இறுதிவரை(டிசம்பர் 31) வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஜனவரி 1, 2021 முதல் மார்ச் 31, 2021 வரை, முத்திரைத் தாள் கட்டணம் 3% என்பதாக இருக்கும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் முத்திரைத் தாள் கட்டணம் 5% என்பதாகவும், பிற இடங்களில் 6% என்பதாகவும் உள்ளது.