சென்னை:

நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் தற்போது நிலவிவரும் குழப்பமான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சுமார் 3,000 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.

மேலும், மூல வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும், பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தால் தீர்மானங்களும் செல்லாது எனவும் வழக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.