எடியூரப்பா பதவி ஏற்க தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி

ர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 இடங்கள் பெற்ற போதிலும் பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.   ஆகவே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுநரைக் கோரியது.   இரு கட்சிகளும் இணைந்தால் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு கர்நாடகா ஆளுநர் பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.  ஆட்சி அமைத்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்குக் கோரி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.   இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரு அவசர மனுவை அளித்தது.

அந்த மனு இன்று விடியற்காலை 1.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது.   இவ்வாறு நடு இரவில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துவது இரண்டாம் முறை ஆகும்.   விசாரணை முடிவில் எடியூரப்பா பதவி ஏற்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   மேலும் இது குறித்த விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.