நிவர் புயல்: சென்னையில் நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து…

சென்னை: நிவர் புயல் காரணமாக,  சென்னையில் நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்று காலை தொடர்ந்து 3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருவதால் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள தமிழகஅரசு நாளை, பொதுவிடுமுறையும் விட்டுள்ளது. இந்த நிலையில், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இன்று மாலை முதல் நாளை காலை 10 மணி வரை, சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமே புறநகர் ரயில்சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.