டில்லி

டில்லியில் வசிப்பதற்கான அடையாள அட்டைகள் இல்லாதவருக்கு சிகிச்சை அளிக்க டில்லி அரசு மருத்துவமனை மறுத்துள்ளது.

டில்லி அரசு பல இலவச மருத்துவ சேவைகளும் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது.   அதன்படி அறுவை சிகிச்சை உட்பட பல சேவைகள் இலவசமாக கிடைக்கும் என மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.     இலவச மருந்துகளும் அறுவை சிகிச்சையும் கிடைக்கும் என்னும் மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு சமீபத்தில் அரசு அதிச்சியை அளித்துள்ளது.

ஓம்பிரகாஷ் சர்மா என்னும் 62 வயதான முதியவர் சிறுநீர் கோளாறு காரணமாக ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.    உடனடி சிகிச்சைக்காக அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் அல்லது சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது.   அவர் மகன் யோகேந்திர சர்மா அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   அங்கு ஓம்பிரகாஷ் சர்மா டில்லியில் வசிப்பதற்கான அடையாள அட்டையை கேட்டுள்ளார்கள்.

ஓம்பிரகாசின் அடையாள அட்டையில் உத்திரப்பிரதேச முகவரி இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.   அவருக்கு அவசரமாக வயிற்றில் சிடி ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் அவர் மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மற்றொரு மருத்துவமனையின் பரிந்துரைக் கடிதத்தை அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.   பிறகு அவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது மருத்துவமனை அதிகாரிகள், “அனைவருக்கும் இலவச சிகிச்சை என்பது கொள்கை ரீதியான முடிவு மட்டுமே.  உண்மையில்  டில்லியில் வசிப்பதற்கான ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை போன்றோர் மட்டுமே இந்த இலவச சிகிச்சைக்கு தகுதியானவர்கள் என டில்லி அரசு அறிவித்துள்ளது.    மேலும் அது போல அடையாள அட்டை இல்லாதவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளனர்.