இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை : பிரபல ஜோதிடர் கருத்து

சென்னை

பிரபல ஜோதிடர் சுவாமி ஓம்கார் இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி பலரும் பணி இழந்துள்ளனர்.  இதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதுமானதாக இல்லை என மாநில அரசுகள் தெரிவித்து மேலும் நிதி உதவி அளிக்கக் கோரிக்கை விடுத்தன.  இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர் நாட்டை கொரோனா என்னும் இருள் சூழ்ந்துள்ளதால் அதை அகற்ற அனைவரும் ஞாயிறு அன்று அதாவது இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபம் அல்லது மெழுகுவர்த்தியை 9 நிமிடங்களுக்கு ஏற்றி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மொபைல் விளக்கு அல்லது டார்ச்சை எரிய விட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு அவர் காரணம் கூறவில்லை.  ஆயினும் நெட்டிசனகள் பலர் திடீர் ஜோதிடர்களாகவும் திடீர் விஞ்ஞானிகளாகவும் மாறி பல காரணங்கள் கூறி உள்ளனர்.  இது பல இடங்களில் நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.   பல படித்த மக்களும் இது போன்ற ஆதாரமற்ற ஜோதிட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து தமிழகத்தின் பிரபல ஜோதிடரான சுவாமி ஓம்கார் தனது டிவிட்டரில்,

 “ஜோதிடத்தை சிறுவயது முதல் கற்றவன் என்பதாலும் 10000 நபர்களுக்கு மேல் கற்று கொடுத்தவன் என்பதாலும் சொல்கிறேன், 5ஆம் தேதி விளக்கு ஏற்றுவதற்கும்  கிரகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 செவ்வாய் எண் என்பது ஜோதிடம் இல்லை. நீங்கள் விளக்கு ஏற்றுவதால் எந்த கிரகத்திற்கும் பவர் ஏற்றப்படாது.

எனப் பதிந்துள்ளார்.