சென்னை:

மிழகத்தில் கிட்டதட்ட ஐம்பது சதவிகித டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாலும், நாளை மதுக்கடைகள் விடுமுறை என்பதாலும் இன்று மதுக்கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த மார்ச் 31ம் தேதி இரவு முதல் மூடப்பட்டன.  இதனால் மதுக்கடைகளின் எண்ணிக்கை கிட்டதட்ட பாதியாக குறைந்தது.

அன்றிலிருந்து (மீதம் திறந்திருக்கும்) டாஸ்மாக் மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவகைகளை வாங்கினர். நெரிசல் அதிகமானதால், அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என டாஸ்மாக கடைகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இடையில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் மதுக்கடைகளில் இயல்பு நிலை நிலவியது. இந்த நிலையில், இன்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் மீண்டும் குடிமகன்கள் கூட்டம் பெருகியது. நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கினர்.

நாளை  மகாவீர் ஜெயந்தி என்பதால் மது மற்றும் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதனாலும் இன்று அதிக கூட்டம் கூடியது என்றும் சொல்லப்படுகிறது.

நீண்ட நேரம் வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிக் குடித்த சிலர் அருகில் சாலை ஓரத்திலேயே மயங்கிக்கிடந்ததையும் காண முடிந்தது.  இது வழக்கமான காட்சிதான் என்றாலும் இன்று பலர் இவ்வாறு விழுந்துகிடந்ததைக் காண முடிந்தது.

இது குறித்து, ”  டாஸ்மாக் கடைகளில் கிட்டதட்ட பாதி மூடப்பட்டுள்ளது.  இது ஒரு சாதனைதான்.  ஆனால் இதனால் எந்தவித பயனும் இல்லை என்பதையே இதுபோன்ற காட்சிகள் உணர்த்துகின்றன.

தங்கள் பகுதியில் கடை மூடப்பட்டிருந்தால், திறந்திருக்கும் கடைகளைத் தேடி வந்து குடிக்கிறார்கள். நான்கு கடைகளில் இருந்த கூட்டம் இப்போது ஒரே கடையில் குடிக்கிறது.

நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தள்ளித்தான் இப்போது மதுக்கடைகள் இயங்குகின்றன.  ஆனால் மணிக்கணக்கில் கடைவாசலில் கியூவில் நின்று மது வாங்கும் குடிமகன்களுக்கு இந்த 500 மீட்டர் ஒரு தடையாக இருக்குமா?

முழு மதுவிலக்கு அமல் படுத்தப்பட வேண்டும். அதோடு கள்ளச்சாராயம் வந்துவிடாதபடியும் கண்காணிக்க வேண்டும். இவற்றை செய்தால்தான் முழுமையான மதுவிலக்கு என்று சொல்ல முடியும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

(படங்கள்: சென்னை, மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ல டாஸ்மாக் கடையின் முன் நிற்கும் குடிமகன்கள் வரிசை.. மற்றும் மயங்கிக்கிடந்த குடிமகன்களில் ஒருவர்)