லக்னோ: பலரும் எதிர்பார்ப்பதைவிட காங்கிரஸ் பெறும் வெற்றியானது பெரிதாக இருக்குமென்றும், மூன்றாவது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை, மத்தியில் அமைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவருவதாகவும் தெரிவித்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்.

“கடந்த 2009ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைப் போன்று இப்போதும் பெற்றாலோ அல்லது அதைவிட பெரிய வெற்றியைப் பெற்றாலோ, தான் அதனால் ஆச்சர்யப்படப் போவதில்லை” என்றுள்ளார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பெற்றது.

மேலும், “உத்திரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகளில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன” என்றார்.

கடந்த 2009ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 205 மக்களவை இடங்களில் வென்றதைப் போன்று, இந்தமுறையும் நடக்குமா? எனக் கேட்டதற்கு, “ஆம். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.