சென்னை,

டந்த 2 வருடமாக சென்னை மழை வெள்ளம், வார்தா புயல் போன்ற  2 பேரிடர்களை சந்தித்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

கமிஷன் கொடுத்து ஆட்சியை தக்கவைப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும்  ஸ்டாலின் கூறி உள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் அம்பேத்நகர் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  மாநகராட்சி நிர்வாகமும் குடிநீர் வடிகால் வாரியமும் ஒன்றிணைந்து முன்னதாகவே இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் மழைநீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்க முடியும் என தெரிவித்தார்.

எண்ணூர்-முட்டுக்காடு இடையே உள்ள 40 கிலோமீட்டர் தூர கால்வாயை தூர்வாரியிருந்தால் தண்ணீர் தேங்கும் நிலை உருவாகி இருக்காது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுப்பணித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரும் தூர்வாரும் நடவடிக்கையை கண்டுகொள்ளவில்லை. எந்த பணிகளில் எவ்வளவு கமிஷன் கொடுக்கலாம் என்ற நிலையில் தான் ஆட்சி நடக்கிறது.

ஏற்கனவே 2015 டிசம்பரில் வெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு வர்தா புயல் ஆகிய 2 பேரிடர்களை சந்தித்த போதும், இந்த ஆண்டும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு எடுக்கப்படவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஆட்சியை தக்கவைப்பதிலும் அமைச்சர்களை அணி மாறாமல் கமிஷன் கொடுத்து தக்கவைப்பதிலுமே கவனம் செலுத்திவரும் பழனிசாமி அரசு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.