நியூயார்க்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ள குளோபல் கோல்கீப்பர் விருதை ரத்துசெய்ய வேண்டுமென கோரியுள்ளனர் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற குழுவினர்.

மைரீட் மாகுரி, தவக்கோல் அப்தல் சலாம் கர்மான் மற்றும் ஷிரின் எபாடி ஆகியோர் இதுதொடர்பாக அந்த அறக்கட்டளைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகான காலகட்டங்களில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது மற்றும் குண்டர்களின் குழுக்கள் பல அதிகாரத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர் என்று தங்களின் கடிதத்தில் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், தற்போதைய நிலையில் காஷ்மீரில் கடும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்கள் குடிமக்கள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ள அவர்கள், மோடிக்கான அந்த விருதை ரத்துசெய்ய இந்தக் காரணங்களே போதும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குஜராத் கலவரங்களை முன்னிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குள் நுழைய மோடிக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்ததையும், பின்னர் அவர் இந்தியப் பிரதமராக ஆனதால் அந்த தடை விலக்கப்பட்டதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.