ஸ்டாகஹாம்: மருத்துவத்துறைக்கான இந்தாண்டு நோபல் பரிசு மொத்தம் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாமில் நடந்த நிருபர் சந்திப்பில் பேசிய நோபல் கமிட்டி உறுப்பினர்கள் இத்தகவலை தெரிவித்தனர். சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம் ஜி.கேலின் மற்றும் கிரேக் எல்.செமன்ஸா ஆகிய மூவர்தான் இந்தாண்டிற்கான மருத்துவத்துறை நோபல் பரிசைப் பெறுபவர்கள்.

செல்களில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவிற்குமான தொடர்பு, ஆக்சிஜன் அளவை செல்கள் உணர்ந்து தம்மை தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என்பதைக் கண்டறிந்தமைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

டைனமைட்டைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் ஏற்படுத்திய அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.