திருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

கோரோனா 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால்,  இன்று (8ந்தேதி) முதல் 16ஆம் தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  கேரளாவில் முழு ஊரடங்கு நாட்களில், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு நாட்களில் யாரும் பசியோடு இருக்க வேண்டாம். அடுத்த வாரம் முதல் அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் உள்ளூர் உணவு நிறுவனங்கள், மக்கள் உணவகங்கள் மற்றும் சமூக சமையல் அறைகளில் இருந்து உணவு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.