நொய்டா – பரிதாபாத் சாலை மீண்டும் திறப்பு: 69 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்

டெல்லி: 69 நாட்களாக மூடப்பட்ட நொய்டா-பரிதாபாத் சாலை 69 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

பல மாநிலங்களில் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர், மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

போராட்டம் காரணமாக டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா மற்றும் பரிதாபாத்தை இணைக்கும் தமனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அதன் காரணமாக டெல்லியில் இருந்து நொய்டா மற்றும் ஃபரிதாபாத் செல்லும் சாலை மூடப்பட்டிருந்தது.

ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள போராட்டக்காரர்களுடன் பேச ஹெக்டே மற்றும் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா ஆகியோரை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு நியமித்தது.

இந் நிலையில் போராட்டக்குழுவினரை மத்தியஸ்தர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், போக்குவரத்து நிலைமைக்கு ஏற்ப, ஆக்கபூர்வமான தீர்வுகளை கொண்டு வருமாறு நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை வலியுறுத்தினோம்,

எங்கள் பரிந்துரைகளுக்கு டெல்லி காவல்துறை ஒத்துழைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். இதையடுத்து, கடந்த 69 நாட்களாக மூடப்பட்டிருந்த சாலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.