நொய்டா:

தான் இந்திய வெளியுறவுத்துறையை  அதிகாரி என்றும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய இளம்பெண்  கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கூறியது பொய் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறையை சேர்ந்த அதிகாரி என்று கூறி, தான் வெளியே செல்லும்போதும் வரும்போதும் காவல்துறையினர் உடன் வாகனத்துடன் வந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரது வீட்டில் அதிரடியாக கடந்த புதன்கிழமை சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.  அந்த பெண்ணின் பெயர் ஷோயா கான் என்பது தெரிய வந்துள்ளது.

மீரட்டை சொந்த ஊராக கொண்ட அவர் தற்போது கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் உள்ள கார் சிட்டி-2 என்ற இடத்தில் தனது கணவர் ஹர்ஷ் பிரதாப் சிங் உடன் வாழ்ந்து வருகிறார். ஷோயாகானுடன் சேர்ந்த சதி செய்யதாக அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிபி நகர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா, கடந்த புதன்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென ரெய்டுநடத்தினோம். அப்போது அவரது வீட்டில் இருந்த ஏராளமான போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், ஐநா கவுன்சிலில், அணுக்கொள்கை அதிகாரி என்பதற்கான போலி அடையாள அட்டை, மற்றும்  வாஷிங்டன் டிசி, ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் என்ற அடையாள அட்டை உள்பட பல நாட்டு முத்திரைகளும், போலியான ஓட்டுநர் உரிமங்களும் கைப்பற்றப்பட்து என்று கூறினார்.

மேலும், அவர்கள் உபயோகப்படுத்தி வந்த  2 எஸ்யுவி கார்களுடன் சிறிய கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர் உபயோகப்படுத்தி வந்த மின்னஞ்சல் குறித்து  ஐ.நா பாதுகாப்பு அதிகாரிகளிடம் விவரம் கோரியதில், அந்த பெண் கூறியது பொய் என்பது தெரிய வந்தது என்று கூறினார்.

ஷோயாகான், தனது மின்னஞ்சல் மூலம், உயர் அதிகாரிகளிடம் தனக்கு பாதுகாப்பு கோரி இருந்தார் என்றும், மேலும் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், தொலைபேசியில் பேசும்போது,  தனது குரலை மாற்றுவதற்கு ஒரு மென்பொருளையும் பயன்படுத்தி, போலீஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, தான் வெளியுறவுததுறை  செயலாளர் ஜோயா கானின் தனிப்பட்ட உதவியாளர்  ஷர்மா பேசுகிறேன் என்று கூறி, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும், உடனே  காவல்துறையினரை அனுப்பி வைக்குமாறு அழுத்தம் அளித்ததாகவும், தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், சமுதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள் ளவே முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள்மீது, மோசடி, போலி ஆவனம் உள்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.