டில்லி:

க்களவையில் காஷ்மீர் சிறப்பு சட்டம் 370, 35ஏ ரத்து மசோதா தொடர்பாக விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், ஆவேசமாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மசோதா மீது திமுக. எம்.பி. டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கிட்ட அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை,  முதுகெலும்பு இல்லாதவர்கள் குறுக்கிடக்கூடாது, சிட் டவுன், சிட் டவுன் என்று  டி.ஆர்.பாலு கையை நீட்டி கடுமையாக எச்சரித்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தை  2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட  எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா மீதான விவாதங்கள்  தொடர்ந்து வருகிறது.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக. எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசமாகப் பேசிக்கொண்டி ருந்தபோது, அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேச முயன்றார். இதனால் கோப மடைந்த டி.ஆர்.பாலு, ரவிந்திரநாத்தை பார்த்து கையை நீட்டி, ‘இங்கு முதுகெலும்பு உள்ளவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்’,  உனக்கு முதுகெலும்பு கிடையாது… உட்கார்… உட்கார் என்று ஆவேசமாக கூறினார். டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.

அப்போது எழுந்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, திமுக எம்.பி. பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏன் குறுக்கீடு செய்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சபாநாயகர் தான் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, எனக்கு முதுகெலும்பு உள்ளது, ஆனால், அவருக்கு இல்லை என்று கூறிவிட்டு பேசத்தொடங்கினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு திமுக  எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்திய பிறகே இது குறித்து முடிவெடுத்திருக்க வேண்டும். அதுதான் சரியான முறை என்றவர், அங்குள்ள நம் மக்கள் அமைதியான முறையில் வாழ வேண்டும் அப்படி செய்திருந்தால் நாங்கள் ஆதரித்திருப்போம், ஆனால், தற்போது அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவித்தார்.